தர்மபுரி அருகே நில மோசடி: போலி நீதிபதி, பாதுகாவலர் கைது
தர்மபுரி அருகே நடந்த நில மோசடி விவகாரத்தில் போலி நீதிபதி மற்றும் அவருடைய பாதுகாவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
தர்மபுரி,
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் ஜெகநாதன். தொழில் அதிபர். இவருக்கு சொந்தமான நிலம் தர்மபுரி அருகே அதியமான்கோட்டை பகுதியில் உள்ளது. இதில் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிலர் வேறொரு நபருக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜெகநாதன் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். பின்னர் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நாகராஜ் என்பவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்ததாகவும், மேலும் போலியான சமரச தீர்ப்பாயத்தை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் தர்மபுரி மற்றும் கோவையை சேர்ந்த 2 வக்கீல்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பான மேல் விசாரணையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (வயது 54) என்பவர் போலி நீதிபதியாக செயல்பட்டு போலியாக சமரச தீர்ப்பாயத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த குமார்(49) என்பவர் பாதுகாவலர் போல் செயல்பட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவுபடி தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சந்திரன், குமார் ஆகியோர் கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியை காரில் கடந்தபோது அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், அன்பழகன், நாவஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி நீதிபதி சந்திரன், அவருக்கு பாதுகாவலராக செயல்பட்ட குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். சமரச தீர்ப்பாயம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story