திருவண்ணாமலை அருகே, விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை - கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
திருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்படூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவர், விவசாய வேலைகளுக்காக நேற்று முன்தினம் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்து வந்து பீரோவில் வைத்துள்ளார். இரவில் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் வெளியே படுத்து தூக்கி உள்ளனர்.
நேற்று காலையில் செல்வராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணி மற்றும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. உடனே செல்வராஜ் பீரோவில் பார்த்த போது 17 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து வீட்டிற்குள் புகுந்து, பீரோ சாவியை எடுத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story