திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: வட மாநில வாலிபர்கள் 6 பேர் புதுக்கோட்டை விடுதியில் சிக்கினர்


திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: வட மாநில வாலிபர்கள் 6 பேர் புதுக்கோட்டை விடுதியில் சிக்கினர்
x
தினத்தந்தி 3 Oct 2019 5:00 AM IST (Updated: 3 Oct 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக வட மாநில வாலிபர்கள் 6 பேர் புதுக்கோட்டை விடுதியில் சிக்கினர். தப்பியோட முயற்சித்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் 30 கிலோ நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் புதுக்கோட்டையில் ஒரு விடுதியில் வட மாநில வாலிபர்கள் தங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு புதுக்கோட்டைக்கு விரைந்து சென்றனர். அங்கு பஸ் நிலையம் அருகே ஒரு விடுதியில் அறை எண் 106-ல் வட மாநில வாலிபர்கள் தங்கியிருப்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து அந்த அறையில் தனிப்படை போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். மேலும் அறையில் இருந்த 5 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்களது அறையை போலீசார் சோதனையிட்ட போது 10-க்கும் மேற்பட்ட பைகள் கிடந்தன. ஆனால் அவற்றில் ஒன்றும் இல்லை.

இதற்கிடையில் அறையில் இருந்தவர்களுக்காக உணவு வாங்க வெளியில் சென்றிருந்த வாலிபர் ஒருவர் விடுதிக்கு திரும்பினார். அப்போது தனிப்படை போலீசார் அறையில் இருந்ததை அறிந்ததும் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பியோட முயற்சித்தார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

அவரை தனிப்படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன் பிடித்தனர். காயமடைந்த அவருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீதம் உள்ள 5 பேரையும் விசாரணைக்காக தனிப்படை போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்தனர். நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story