‘நீட்’ தேர்வு முறைகேட்டில் கைதானவர்: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இடைநீக்கம்


‘நீட்’ தேர்வு முறைகேட்டில் கைதானவர்: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இடைநீக்கம்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:15 PM GMT (Updated: 2 Oct 2019 8:33 PM GMT)

‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் முகமது இர்பான் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தர்மபுரி,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் முகமது இர்பான் (வயது 21). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 8-ந்தேதி முதல் கல்லூரிக்கு வரவில்லை. இந்த நிலையில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் உத்தரவுப்படி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவ-மாணவிகளின் ‘நீட்’ தேர்வு தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. 99 மாணவ-மாணவிகள் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஆஜரானார்கள். ஆனால் மாணவர் முகமது இர்பான் மட்டும் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு ஆஜராகவில்லை.

ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு ஆஜராகுமாறு 2 முறை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் முகமது இர்பானுக்கு பதிவு தபால் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் அவர் நேரில் ஆஜராகவில்லை. ‘நீட்’ தேர்வில் முறைகேடு தொடர்பாக முகமது இர்பானின் தந்தை முகமது சபி கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதையடுத்து மாணவர் முகமது இர்பான் சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவர் இடைநீக்கம்

இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ, துணை முதல்வர் முருகன் ஆகியோர் தேனியில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி மாணவர் முகமது இர்பான் கல்லூரியில் கொடுத்த மருத்துவ படிப்பு சேர்க்கை மற்றும் ‘நீட்’ தேர்வு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தனர். பின்னர் இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் வழிகாட்டுதல்படி மாணவர் முகமது இர்பானை இடைநீக்கம் செய்து தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ உத்தரவிட்டார். இந்த உத்தரவு கடிதம் மாணவரின் வீட்டுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ கூறியதாவது:-

மாணவர் முகமது இர்பான் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரை கல்லூரிக்கு வந்து உள்ளார். அதன்பின்னர் அவர் விடுமுறை எடுத்து சென்றார். சான்றிதழ்கள் மற்றும் ‘நீட்’ தேர்வு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு ஆஜராக அவருக்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கிடையே அவர் போலீசாரின் நடவடிக்கைக்கு உள்ளானார். இதனால் அவரை இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்ய மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் மாணவர் முகமது இர்பான் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story