கடலூர் கலெக்டர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை - 56 பேர் கைது
கடலூர் கலெக்டர் அலுவலகத்தை தனியார் நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 56 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் முதுநகர் சிப்காட்டில் இயங்கி வரும் 2 நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 1 மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமுக தீர்வு ஏற்படவில்லை.
இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து, அவரது தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நேரில் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் மாநில இளைஞரணி செயலாளர் செந்தில் முன்னிலையில் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தனசேகர், சுகுனேசன், உதயகுமார், சந்திரசேகர், விஜய் மற்றும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறி, உண்ணாவிரதம் இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது. ஆகவே கலைந்து செல்லுங்கள் என்றனர்.
ஆனால் இது எங்களின் வாழ்வாதார பிரச்சினை. ஆகவே கலைந்து செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 56 தொழிலாளர்களை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றினர். தொடர்ந்து அவர்களை மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
Related Tags :
Next Story