நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 1–9–2019 முதல் நடைமுறைக்கு வரவேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும்,  2003–ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், விரைவு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள 2 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சென்னை பஸ்களை முன்புபோல் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த பொன்குமார், தொ.மு.ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த இஸ்ரேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு.வை சேர்ந்த ஜான்ராஜன் தொடங்கி வைத்தார். தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சிதம்பரம் (தொ.மு.ச.), பகவதியப்பன் (சி.ஐ.டி.யு.) ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பொன்.சோபனராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இதில் முருகன், பகவதி, கண்ணுபிள்ளை, மனோகரன், ராதாகிருஷ்ணன், செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணித்தோட்டம்

இதேபோல் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த போராட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார். தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பால்ராஜ் (தொ.மு.ச.), சங்கரநாராயணன் (சி.ஐ.டி.யு.), லெட்சுமணன் (எச்.எம்.எஸ்.) உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஞானதாஸ், ஸ்டீபன் ஜெயக்குமார், முத்துக்கருப்பன் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு. செயல்தலைவர் லெட்சுமணன்  போராட்டத்தை முடித்து வைத்தார். முடிவில் கனகராஜ் நன்றி கூறினார்.

Next Story