திருச்சியில் 30 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை வழக்கு: நகைக்கடையில் 2-வது நாளாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை


திருச்சியில் 30 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை வழக்கு: நகைக்கடையில் 2-வது நாளாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Oct 2019 11:15 PM GMT (Updated: 3 Oct 2019 4:54 PM GMT)

திருச்சியில் 30 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை போன வழக்கில் பிரபல நகைக்கடையில் 2-வது நாளாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மலைக்கோட்டை,

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட முக்கிய நகரங்களில் லலிதா ஜூவல்லரி மார்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் வி.எம்.சி. காம்ப்ளக்சில் 3 அடுக்குமாடி கட்டிடத்தில் லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 1-ந் தேதி இரவு ஊழியர்கள் கடையின் ஷட்டரை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் அதிகாலை 2 மணி முதல் 4.30 மணிக்குள் கடையின் இடதுபுறம் உள்ள சுவரில் துளைபோட்டு 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் கடையின் தரைதளத்தில் கண்ணாடி ரேக்குகளில் அலங்காரமாக வைக்கப்பட்டு இருந்த தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மொத்தம் ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகள் கொள்ளை போய் உள்ளன. கொள்ளையர்கள் தங்களை அடையாளம் காண முடியாதபடி முகமூடி, ஜெர்கின் மற்றும் கையுறை அணிந்து வந்து இருந்தனர். நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கையில் பையுடன் சாவகாசமாக நடந்து வரும் காட்சி கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். அங்கு தரைதளத்தில் இருந்த நகைகள் முழுவதுமாக கொள்ளை யடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கடையின் மேலாளர் அறையின் சுவரில் துளைபோட்டு கொள்ளையர் கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டி இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் சுவரில் துளைபோட்ட இடத்தில் மிளகாய்பொடி பாக்கெட்டும், ஒரு காலி மதுபாட்டிலும் கிடந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடையின் மேலாளர் நாகப்பன் (வயது 35) கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், “கடந்த 1-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றோம். 2-ந் தேதி காலை கடையின் ஊழியர்களான பகத்சிங், பிரகலாத்சிங், ரபீக் ஆகியோர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து 30 கிலோ எடை கொண்ட ரூ.12 கோடியே 31 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆகவே இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் வழக்குப் பதிவு செய்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்புதுலக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது.

போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கொள்ளையர் களை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நேற்றும் 2-வது நாளாக கடை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடை மேலாளர்கள், காவலாளிகள், ஊழியர்கள் என 192 பேரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரு கும்பல் சுவரில் துளைபோட்டு வங்கி லாக்கரை உடைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். தற்போது லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவமும், ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவமும் ஒரே மாதிரி இருப்பதால் இந்த இரு கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. ஆகையால் மாவட்ட போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story