போலி ஆவணங்கள் மூலம், இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது - கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை


போலி ஆவணங்கள் மூலம், இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது - கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளரை கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து உள்ளனர்.

கோவை,

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏராளமான இலங்கை அகதிகள் முகாம் உள்ளன. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 3 அகதிகள் முகாம் உள்ளன. இதில் ஏராளமானோர் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் தமிழகத்துக்கு பலர் வந்ததாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள 3 அகதிகள் முகாமிலும் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் டிராவல்சுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கோவை, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இலங்கை அகதிகள் குறித்த தகவலும், அவர்களின் முகவரியும் இருந்தன.

உடனே போலீசார் அந்த டிராவல்ஸ் உரிமையாளரான கோவை கணபதி புதூர் 3-வது வீதியை சேர்ந்த ரகுபதி (வயது 48) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் 10 இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து கியூ பிரிவு போலீசார் ரகுபதி மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்பட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அத்துடன் அவருடைய நிறுவனத்தில் இருந்து இலங்கை அகதிகளுக்கு எடுத்து கொடுத்த 2 பாஸ்போர்ட் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் போலீசார் ரகுபதியை கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தம், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கியூ பிரிவு போலீசார் கூறியதாவது:-

கைதான ரகுபதி, கோவை, ஈரோடு, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 10 பேருக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்து உள்ளார். அதில் அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று போலி ஆவணங்கள் தயாரித்து ஆதார் அட்டை பெற்று அதன் மூலம் பாஸ்போர்ட் எடுத்து கொடுத்து உள்ளார்.

அந்த பாஸ்போர்ட் மூலம் சிலர் விசா பெற்று பிரான்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர். இவ்வாறு அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் எடுத்து கொடுக்க ஒவ்வொருவரிடமும் தலா ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை பெற்று உள்ளார்.

தற்போது 10 பேருக்கு மட்டுமே அவர் பாஸ்போர்ட் எடுத்து கொடுத்து இருப்பது தெரியவந்து உள்ளது. இன்னும் பலருக்கு அவர் பாஸ்போர்ட் மற்றும் விசா எடுத்து கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது. எனவே ரகுபதியை காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு தகவல்கள் கிடைக்கும். எனவே அவரை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story