கம்பத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை: ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது போலீசார் அதிரடி
கம்பத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்,
கம்பம் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு, கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்–இன்ஸ்பெக்டர் வினோத்ராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் கம்பத்தில் பல்வேறு இடங்களில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது கம்பம்மெட்டு சாலையில் உள்ள 18-ம் கால்வாய் பகுதியில் ஆட்டோவில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கடத்தி வந்த கூடலூரை சேர்ந்த மகாலிங்கம்(வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியை சேர்ந்த ராகுல்(26), அமல்மது(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் கோசந்திர ஓடை பகுதியில் மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 16 வயதுள்ள 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் கம்பம் காட்டுபள்ளிவாசல் பகுதியில் கஞ்சா விற்ற கோம்பை சாலையை சேர்ந்த ரவிசேகர்(39)என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கம்பம் கோம்பைரோடு நாககன்னியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்ற விவேகானந்தர் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ்(29) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கம்பம் ஏழரசு கோவில் அருகில் உள்ள வீரப்பநாயக்கன் குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன்(25), கம்பம் கோம்பைசாலையை சேர்ந்த தினேஸ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதில் பரமேஸ்வரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய தினேஸ் மற்றும் ஜெயபிரகாசை போலீசார் தேடிவருகின்றனர்.
கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டது கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story