முல்லைப்பெரியாறு அணையில், துணை கண்காணிப்பு குழுவினர் மதகை இயக்கி சோதனை
முல்லைப்பெரியாறு அணையில் மதகை இயக்கிப் பார்த்து துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். வல்லக்கடவு பாதையில் உள்ள பாலம் சீரமைப்பு குறித்து இருமாநில அதிகாரிகள் காரசார விவாதம் நடத்தினர்.
குமுளி,
தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு கடந்த 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.
துணை கண்காணிப்பு குழுவினர் கடைசியாக கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி அணையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மூவர் கண்காணிப்பு குழுவின் வழிகாட்டுதல்படி, முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதற்காக துணை கண்காணிப்பு குழுவின் தலைவரான மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின், கேரள மாநில பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜோசப், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்றனர்.
அணையில் மதகு பகுதி, பேபி அணை, சுரங்கப்பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டனர். சுரங்கப்பகுதியில் நீர்க்கசிவு அளவை ஆய்வு செய்தனர். அணையில் உள்ள 13 மதகுகளில் முதலாவது மதகை இயக்கி சோதித்துப் பார்த்தனர். அப்போது அது நல்ல நிலையில் இயங்கியது. பின்னர், குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள மூவர் கண்காணிப்பு குழு அலுவலகத்தில், துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
ஆய்வுக்கூட்டத்தின் போது அணைக்கு செல்லும் வல்லக்கடவு பாதையில் உள்ள பாலம் சீரமைப்பு, வனத்துறையின் இடையூறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகளுக்கும், தளவாட பொருட்கள் கொண்டு செல்வதற்கும் கேரள வனத்துறையினர் இடையூறு செய்வது குறித்து இருமாநில அதிகாரிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. தமிழக அதிகாரிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதை கேரள வனத்துறையினர் கைவிட வேண்டும் என்றும், அணையின் பராமரிப்பு பணிக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வல்லக்கடவு பாதையில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர நிரந்தரமான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பாதையும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அணையின் பராமரிப்பு பணிக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. அத்துடன் அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறையும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. இதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளை மூவர் கண்காணிப்பு குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்றனர்.
Related Tags :
Next Story