வக்கீல்களும், நீதிபதிகளும் தர்மத்தின் வழியில் செயல்பட வேண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


வக்கீல்களும், நீதிபதிகளும் தர்மத்தின் வழியில் செயல்பட வேண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 6 Oct 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல்களும், நீதிபதிகளும் தங்களது கடமையை உணர்ந்து தர்மத்தின் வழியில் செயல்பட வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பேசினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றங்கள், கூடுதல் மகிளா நீதிமன்றம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்த் வெங்கடேஷ், கோவிந்தராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீதிமன்றங்களை திறந்து வைத்தனர். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன், கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினார்கள்.

குற்றவியல் வழக்குகள் குறைய வேண்டும்

அப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பேசுகையில், நீதி என்பது அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும். இதற்கான கடமை வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் உண்டு. வக்கீல்களும், நீதிபதிகளும் தங்களது கடமையை உணர்ந்து தர்மத்தின் வழியில் செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளும் வகையில் தீர்ப்பளிக்க வேண்டும். உரிமையியல் வழக்குகள் அதிகரிக்க வேண்டும். குற்றவியல் வழக்குகள் குறைய வேண்டும். இவ்வாறு இருப்பதே நீதி நன்றாக இருப்பதற்கு சான்றாகும். உரிமை எங்கு பறிக்கப்படுகிறதோ அங்கே உள்ள மனிதன் நீதிமன்றத்தை நாட வேண்டும். ஆகவே வழக்குகள் அதிகரிக்கும் போது நீதிமன்றங்கள் சரியாக செயல்படுகிறது என பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளதே அர்த்தமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

நீதித்துறையின் மீது நம்பிக்கை

முன்னதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசுகையில், நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவு தேங்கி இருந்தாலும், மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமென்றால் சமுதாய நோக்கில் வழக்குகளை நாம் விரைந்து முடிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற முடியும் என்றார்.

நீதிபதி கோவிந்தராஜ் பேசுகையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வக்கீல்கள் சமூக செயல்பாட்டுடன் செயல்பட வேண்டும். புராதான கட்டிடங்கள் வரிசையில் புதுக்கோட்டை நீதிமன்றங்கள் உள்ளதால் அதற்கான பராமரிப்பு நிதியை அரசிடம் பெற்று தரும் பணி மற்றும் வளாக ஒப்படைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து நீதிபதி சுரேஷ்குமாரும் பேசினார்.

விழாவில் முதன்மை குற்றவியல் நீதிபதி சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வக்கீல்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story