சந்தவாசல் அருகே, போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


சந்தவாசல் அருகே, போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2019 10:45 PM GMT (Updated: 6 Oct 2019 9:41 PM GMT)

சந்தவாசல் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கண்ணமங்கலம், 

சந்தவாசல் அருகே உள்ள அனைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 38), தொழிலாளி. அவருடைய மனைவி கோமதி (33). இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணனின் அண்ணி பாரதி வீட்டில் 32 பவுன் நகை திருட்டு போனது.

இதுகுறித்து பாரதி சந்தவாசல் போலீசில் கொடுத்த புகாரில், சரவணன் நகைகளை திருடியிருக்கலாம் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார், அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அதைத் தொடர்ந்து சரவணனை, பாரதி பார்க்கும் போதெல்லாம் எனது நகைகளை திருடிவிட்டாயே என ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சரவணன் கடந்த 4-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சரவணனின் மனைவி கோமதி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story