ஆயுத பூஜையை முன்னிட்டு காய்கறி விலை உயர்வு - விற்பனை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி


ஆயுத பூஜையை முன்னிட்டு காய்கறி விலை உயர்வு - விற்பனை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 7 Oct 2019 5:28 AM IST (Updated: 7 Oct 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்திருந்தது. ஆனாலும் விற்பனை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகள், பல்லடம், பொங்கலூர், தாராபுரம், காங்கேயம் சுற்று வட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் இருந்து அனைத்து வித காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் இங்கு தினசரி சுமார் 100 டன் காய்கறிகள் விற்பனையாகிறது.

மளிகை கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், சந்தை வியாபாரிகள், ஓட்டல் கடைக்காரர்கள், வெளியூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள்.

இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று சுமார் 120 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. அதேசமயம் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்திருந்தது.

அந்த வகையில் நேற்றுமுன்தினம் ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் நேற்று ரூ.33-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.35-க்கும், ரூ.25-க்கு விற்கப்பட்ட பாகற்காய் ரூ.28-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட பீர்க்கங்காய் ரூ.25-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.17-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.20-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.18-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.35-க்கும், ரூ.45-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.50-க்கும், ரூ.55-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.60-க்கும், ரூ.13-க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனையில் அனைத்து காய்கறிகள் விலையும் கிலோவுக்கு ரூ.5 வரை அதிகரித்து இருந்தது.

அதே போல் ரூ.250-க்கு விற்கப்பட்ட 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.300-க்கு விற்கப்பட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.16-ல் இருந்து ரூ.20 ஆக உயர்ந்திருந்தது. இதுகுறித்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறும் போது, ஆயுத பூஜையை முன்னிட்டு காய்கறிகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தோம். விலையும் உயர்ந்திருந்தது. வழக்கத்தை விட வியாபாரிகள் அதிக அளவில் வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து காய்கறிகளும் விரைவில் விற்று தீர்ந்து விட்டன என்றனர்.


Next Story