நூதன முறையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நூதன முறையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2019 10:15 PM GMT (Updated: 8 Oct 2019 6:58 PM GMT)

மயிலாடுதுறையில், ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நூதன முறையில் 12 பவுன் நகைகள் திருட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், திருவெண்காடு கிராமத்தை சேர்ந்தவர் பேபி (வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேபி மயிலாடுதுறைக்கு வந்தார். மயிலாடுதுறை கச்சேரி ரோடு தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 மர்ம நபர்கள், நகைகளை அணிந்து கொண்டு பேபி தனியாக செல்வதை நோட்டமிட்டனர். இதனால் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அவரிடம் கடைத்தெரு கூட்டமாக உள்ளது. எனவே நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி தங்களிடம் உள்ள கைப்பையில் போட்டு கொள்ளும்படி கூறினர். இதனை நம்பிய பேபி, தான் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல்கள், 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை கழற்றினார். உடனே மர்ம நபர்களில் ஒருவர் கைப்பையை திறந்து பிடித்து கொண்டார். அதில் தனது நகைகளை பேபி வைத்தார். அப்போது அருகில் நின்ற மற்றொரு மர்மநபர், பேபியிடம் பேச்சு கொடுத்தபடி அவரது கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் பையில் இருந்த 12 பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.

வலைவீச்சு

இதனை சற்றும் அறியாத பேபி, வீட்டிற்கு சென்று பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. அவற்றை மர்மநபர்கள் திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேபி, இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நூதன முறையில் நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story