நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் வானதி சீனிவாசன் பேட்டி


நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2019 11:15 PM GMT (Updated: 8 Oct 2019 9:34 PM GMT)

நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் வந்தார். பின்னர் அவர் சித்தன்னவாசலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள் என்று காவல் துறையினரே ஒருவித அச்சத்தை உருவாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். காவல்துறை தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர்-சீன அதிபர் சந்திப்பினால் தமிழகம் உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் உலக அளவில் சுற்றுலா தலமாக மாறி வருகிறது. பிரதமர்-சீன அதிபர் சந்திப்பு உலக அளவில் பேசப்படுவதால் அதற்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்பான முறையில் விளம்பர பதாகைகள் வைப்பதில் தவறில்லை. இந்த பிரச்சினையை வேறு விதமாக பார்க்கக்கூடாது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். பா.ஜ.க. 2 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம்

அரசு பள்ளிகளை மூடுவதற்கு காரணம் பா.ஜ.க.வா, அதற்கு யார் காரணம், தமிழில் கூட பெயர் வைக்க முடியாத அளவிற்கு நிலைமை உருவாக்கியதற்கு யார் காரணம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்தி திணிப்பு என்ற வார்த்தையிலிருந்து வெளிவர வேண்டும். யார் விருப்பப்பட்டாலும் எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம், நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வினை வளர்ப்பதற்கு தி.மு.க. முயற்சி செய்ய வேண்டும். பா.ஜ.க. தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு பல வழிகள் உள்ளன. ஆனால் மத்திய அரசு திட்டங்களை நாங்கள் கொண்டு செல்வதற்கான முயற்சியை நாங்கள் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story