‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 8 Oct 2019 9:56 PM GMT)

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

தேனி,

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவருடைய மகன் உதித்சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். இந்த ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை வெங்கடேசன் ஆகியோரை கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களை தொடர்ந்து சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் முகமது இர்பானின் தந்தை முகமது ‌‌ஷபி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவர் முகமது இர்பான் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த இடைத்தரகர் ர‌ஷீத், வாணியம்பாடியை சேர்ந்த வேதாச்சலம் ஆகிய 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் தான், மேலும் யாரெல்லாம் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்ற விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய நபராக ர‌ஷீத் உள்ளார். அவர் மூலமாக தான் ஆள்மாறாட்டம் செய்வதற்கு பணம் கைமாறியுள்ளது. அவர் சிக்கினால் தான் இந்த ஆள்மாறாட்டத்துக்கு அரசு அதிகாரிகள் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? என்பது தெரியவரும். ஆனால், தலைமறைவாக உள்ள இடைத்தரகர்கள் இருவரையும் பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

இடைத்தரகர்கள் சிக்காத நிலையில், இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளது. அதாவது, தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அசோக் கிரு‌‌ஷ்ணன் என்பவர் பெயரில் வந்த மின்னஞ்சல் மூலமாக தான் இந்த ஆள்மாறாட்ட விவகாரம் வெளியே தெரியவந்தது. அப்படி இருக்கையில் மின்னஞ்சல் அனுப்பிய அசோக் கிரு‌‌ஷ்ணன் என்பவரையும் போலீசார் இன்னும் பிடிக்கவில்லை. மின்னஞ்சல் அனுப்பியவர் தொடர்பாக, கூகுள் நிறுவனம் அளித்த விவரங்களை கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியும் அவர் இன்னும் சிக்கவில்லை.

அதேபோல், விசாரணையின் போது, மற்ற மாணவர்கள் தங்களுக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு ஆள் மாறாட்டம் விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறியிருந்தனர். பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர் யார்? என்பதும் இதுவரை மர்மமாகவே உள்ளது. ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவர்களுக்காக தேர்வு எழுதியவர்கள் யார்? என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

இதற்கிடையே மாணவர் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு தேனி விரைவு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. கோர்ட்டில் சரண் அடைந்த மாணவர் முகமது இர்பானை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story