கும்பகோணம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கும்பகோணம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Oct 2019 3:45 AM IST (Updated: 10 Oct 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள குறிச்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது22). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பிரேமா, சேகர் ஆகியோருடைய வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது. இதில் பிரேமாவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பாத்திரங்களை சேதப்படுத்தி உள்ளனர்.

வலைவீச்சு

சேகரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க வந்தபோது சத்தம் கேட்டு அவர் ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆசிரியரின் வீட்டில் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், அடுத்தடுத்து உள்ள 2 வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story