மாவட்ட செய்திகள்

திண்டிவனம் அருகே, குளத்தில் ஆண் குழந்தை பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை + "||" + Near Tindivanam, Male infant carcass in pond Murder? Police are investigating

திண்டிவனம் அருகே, குளத்தில் ஆண் குழந்தை பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை

திண்டிவனம் அருகே, குளத்தில் ஆண் குழந்தை பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
திண்டிவனம் அருகே ரத்த காயங்களுடன் ஆண் குழந்தை ஒன்று குளத்தில் பிணமாக மிதந்தது. அந்தக்குழந்தை கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள்(வயது 35), வாய்பேச முடியாத இவருக்கு ஒரு வயதில் ஜெயப்பிரகாஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு பட்டம்மாள் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவரது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பட்டம்மாள் அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பட்டம்மாள் வீட்டின் அருகே உள்ள குளத்தில் நேற்று காலை ஜெயப்பிரகாஷ் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக மிதந்தான். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பட்டம்மாளுக்கும், வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிய பட்டம்மாள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் பிணமாக மிதந்த தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாரேனும் ஆண் குழந்தையை கடத்திச் சென்று கொலை செய்து குளத்தில் வீசிச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த தொழிலாளி ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.