பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2019 4:30 AM IST (Updated: 10 Oct 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கடந்த ஆண்டு கஜா புயல் தாக்குதலால் காவிரி டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நெல்லுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராடியபோது காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்தது.

தற்போது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 544 வருவாய் கிராமங்களில் சுமார் 100 வருவாய் கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மறுபரிசீலனை செய்து அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

முற்றுகை போராட்டம்

அதன்படி நேற்று திருவாரூர் விளமல் கல்பாலத்தில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் வரதராஜன், மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் எஸ்.செந்தில்குமார், மாவட்ட தலைவர் சுப்பையன், மாவட்ட கவுரவ தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வாசல் கேட் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டை தள்ளி திறக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

இதை தொடர்ந்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரபட்சமன்றி அனைத்து விவசாயி களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அறுவடை ஆய்வறிக்கையில் கிராமம் பாகுபாடு காட்டி முறைகேடு செய்து இழப்பீடு பெற முடியாமல் செய்த வேளாண்துறை அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஆய்வறிக்கையை மாவட்ட கலெக்டர் ஒப்புதல் பெற்று இறுதி செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் ஆனந்தை, சங்க நிர்வாகிகள் சந்தித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Next Story