சேலத்தில் வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் அவதி


சேலத்தில் வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Oct 2019 4:30 AM IST (Updated: 11 Oct 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பலத்த மழை பெய்ததால் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

சேலம்,

சேலத்தில் நேற்று மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

இதையடுத்து மாலை 4 மணியளவில் லேசாக மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சேலம் மாநகர் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் 4 ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கு மழைநீர் தேங்கியதால் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் சிரமப்பட்டனர். மேலும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

வீடுகள், கடைகள்

இதேபோல் சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் பகுதி சாலை, சாரதா கல்லூரி சாலை, 4 ரோடு நாராயண பிள்ளை தெரு, பெரமனூர்,அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பெரமனூர் பகுதியில் கடை மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறைக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து சென்றதை காண முடிந்தது.

இதனிடையே நாராயண பிள்ளை தெரு 40 அடி ரோட்டில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் தேங்கி நின்ற மழைநீரில் காகிதத்தில் கப்பல் செய்து விடும் போராட்டம் நடத்தினர். சேலம் நகரில், சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. 

Next Story