சேலத்தில் சுகாதார தூதுவர்களாக மாணவர்களை நியமிக்க நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் தகவல்


சேலத்தில் சுகாதார தூதுவர்களாக மாணவர்களை நியமிக்க நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 9:17 PM GMT)

சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 இடங்களில் அட்டை பெட்டிகள் வைத்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா சேலம் குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி தூய்மையே சேவை என்ற இயக்கத்தின் கீழ் ‘‘பிளாஸ்டிக் கழிவுகள் இல்லா இந்தியா’’ என்பதன் அடிப்படையில் மாநகர பகுதிகள் முழுவதிலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிட, பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேம்பாட்டு பணிகள்

அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலைய வளாகங்கள், வணிக வளாகங்கள், உழவர்சந்தைகள், ரெயில் நிலையம், திரையரங்க வளாகங்கள், மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வளாகம் மற்றும் மண்டல அலுவலக வளாகங்கள் உள்ளிட்ட 100 இடங்களில் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை உரிய முறையில் மறுசுழற்சி பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சுகாதார மேம்பாட்டு பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதனால் அனைத்து வார்டுகளிலும் தினமும் தீவிர தொற்று நோய் தடுப்பு மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதார தூதுவர்கள்

மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் தீவிர தொற்று நோய் தடுப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளிலுள்ள குடிநீர் பாத்திரங்கள் முறையாக பராமரித்து கொசு புழுக்கள் உருவாகாத வண்ணம் உரிய இடைவெளியில் பாத்திரங்களை சுத்தப்படுத்தி பயன்படுத்திட வேண்டும். இதுபற்றி தங்களது உறவினர், நண்பர்களிடமும் மாணவ, மாணவிகள் தெரிவிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளும் போது தீவிர தொற்று நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே எளிதில் சென்றடையும் என்பதால் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளை சுகாதார தூதுவர்களாக நியமிக்க மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், சுகாதார ஆய்வாளர் ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story