மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு கேட்டு வனத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்


மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு கேட்டு வனத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 7:45 PM GMT)

தேனியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வலியுறுத்தி வனத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில், வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமை தாங்கினார். மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காராம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்குவது தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது விவசாயிகள், ‘மாவட்டத்தில் 18 ஆயிரம் மலை மாடுகள் உள்ளன. அவற்றுக்கு இன்னும் மேய்ச்சல் அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை. உடனே அவைகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு வனத்துறை அதிகாரிகள், ‘கால்நடை பாதுகாப்புத்துறையிடம் மலைமாடுகளின் உரிமையாளர்களின் விவரங்கள், அவரிடம் உள்ள கால்நடைகள் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அனைத்து மாடுகளுக்கும் வழங்கினால் வனவளம் அழிந்து விடும்’ என்றனர். இதனால், விவசாயிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் அனுமதிச்சீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அகமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் பேசும்போது, ‘அகமலை மலைப்பகுதியில் கடந்த ஆண்டு 200 பலா மரங்கள் வெட்டப்பட்டன. வெட்டியவர்கள் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சோதனை சாவடிகள் வைத்துள்ள போதிலும் இன்னும் மர்மமாகவே உள்ளது’ என்றனர்.

அதற்கு மாவட்ட வன அலுவலர், ‘இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும், இக்கூட்டத்தில், “வன விலங்குகளால் விளை பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். வருசநாடு அருகே அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு செல்லும் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வனத்துறையினர் குழி தோண்டி வைத்துள்ளனர். இதனால், விளை பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. அந்த குழியை மூடி, பாதை அமைக்க வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Next Story