சாராயம் குடித்தபோது நடந்த தகராறில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
திருப்பத்தூர் அருகே சாராயம் குடித்தபோது நடந்த தகராறில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பூ வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியில் தொழிலாளியாக ஈடுபட்டு வந்தார். அவர் இந்த பணிக்காக துபாய் நாட்டுக்கு சென்றிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
ரமேசுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகில் சிலர் சாராய வியாபாரமும் செய்து வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு ரமேஷ் சாராயம் குடிக்க சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரி கிருஷ்ணனும் சாராயம் குடித்துக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கிருஷ்ணன் கத்தியால் ரமேைச சரமாரியாக குத்தினார். இதில் அலறியபடியே ரமேஷ் துடிதுடித்தவாறு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். உடனே கிருஷ்ணன் மற்றும் அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் சாராயம் விற்றவர் உள்பட அனைவரும் ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய பூ வியாபாரியை போலீசார் கைது செய்தனர். சாராயம் விற்றவர் மற்றும் அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இறந்த ரமேசுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் ரமேசின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story