கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி


கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2019 6:45 PM IST (Updated: 12 Oct 2019 6:33 PM IST)
t-max-icont-min-icon

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல்துறை சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது 5-வது கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்கு பல்லாயிரக்கணக்கில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அங்கு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரியவந்துள்ளது.

நேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கீழடிக்கு வந்து அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு, இரட்டைச்சுவர், வட்டச் சுவர், தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய், கழிவுநீர் வாய்க்கால் சுவர், பானை ஓடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு அது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது:-

கீழடி பகுதியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 16 ஆயிரம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் உலகத்திலேயே பழமையான நாகரிகம், தமிழ் நாகரிகம் என்பது நிரூபணமாகி உள்ளது. அந்த காலத்தில் வசித்த மக்கள் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக வாழ்ந்துள்ளனர் என்பதும் உறுதியாகி உள்ளது. இங்குள்ள உறைகிணற்றை பார்க்கும் போது சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புள்ள நகரமாக கீழடி விளங்கி உள்ளது. சுமார் 110 ஏக்கரில் கீழடி மற்றும் மணலூர், அகரம், கொந்தகை ஆகிய கிராமங்களில் 6-வது கட்ட ஆராய்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடி பகுதியில் முதல் மற்றும் 2-வது கட்ட அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்ராமகிருஷ்ணன் தலைமையில் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். அதற்கான பரிசு அவர் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து நான் அப்போது மத்திய அரசிடம் அவரை மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அமர்நாத்ராமகிருஷ்ணன் இங்கு 102 குழிகள் தோண்டி ஏராளமான பொருட்களை கண்டுபிடித்தார். அதன் பின்னர் வந்த தொல்லியல் அதிகாரி ஸ்ரீராமன் 10 குழிகள் மட்டும் தோண்டி எந்த பொருளும் கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.

அதன் பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் அகழாய்வு பணிகள் மீண்டும் நடைபெற்று பண்டைய தமிழர்களின் வரலாறு-நாகரிகம் குறித்து நமக்கு தற்போது தெரிகிறது. இதற்காக அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகளை நான் மனமார பாராட்டுகிறேன். அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நிலம் தந்துள்ள இப்பகுதி விவசாயிகள் நன்றிக்குரியவர்கள். இதேபோல் ஆதாயம் கருதாமல் அகழ்வாராய்ச்சி பணிக்கு நிலம் தர இப்பகுதி விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், கீழடிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் வைகோவுடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story