ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 3:45 PM GMT)

ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தது ராசிபுரம் கிராமம். இங்கிருந்து மண்டையூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக தார்சாலை போடப்பட்டது. இந்நிலையில் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மின்கம்பம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் இந்த சாலை வழியாக லாரிகள் செல்வதால் புதிய தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்து காட்சி அளிக்கிறது. மேலும் இந்த சாலை தரமாக போடப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

இந்நிலையில் சேதமடைந்த ராசிபுரம் சாலையை மீண்டும் சீரமைத்து தர வேண்டியும், இந்த சாலை வழியாக தனியார் தொழிற்சாலையில் இருந்து லாரிகளில் அதிக பாரத்துடன் மின்கம்பங்கள் ஏற்றிச்செல்வதை தடை செய்யக்கோரியும் ராசிபுரம் கிராம ஊர் முக்கியஸ்தர்கள் ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அந்த வழியாக வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story