மாவட்ட செய்திகள்

கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டதால் பரபரப்பு + "||" + Massacre of Karunanidhi's wife and wife buried near Karur

கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டதால் பரபரப்பு

கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டதால் பரபரப்பு
கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை செய்யப்பட்டனர். நிதி நிறுவன அதிபரின் அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்,

திண்டுக்கல் மாவட்டம், ஈசநத்தம் அருகே தாசநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50). நிதி நிறுவன அதிபர். இவர் மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரத்தில் தங்கி அங்கு நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி வசந்தாமணி(42). இவர்களுக்கு பாஸ்கர்(27) என்ற மகனும், சரண்யா(25) என்ற மகளும் உள்ளனர். இதில் சரண்யா திருமணம் ஆகி தனது கணவர் கவுசிக் (30) உடன் வசித்து வருகிறார். கவுசிக் தாசநாயக்கனூரை சேர்ந்தவர். பாஸ்கர் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.


இந்த நிலையில் பாஸ்கருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி வேடசந்தூரில் திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து செல்வராஜூம், அவரது மனைவி வசந்தாமணியும் மகனின் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு செல்வராஜ் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உத்தண்டகுமாரவலசு பகுதியில் வசிக்கும் தனது அக்காள் கண்ணம்மாள்(54) வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தார். அங்கு அக்காளை சந்தித்து திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை கொடுத்தார். இது குறித்து செல்போன் மூலம் தனது மகன் பாஸ்கரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு அங்கிருந்து காரில் செல்வராஜ் தனது மனைவியுடன் மதுரையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் கழித்து அவர்களை பாஸ்கர் செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், தனது பெற்றோர் மாயமானது குறித்து உறவினர்களிடம் தெரிவித்து அவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூரில் கேட்பாரற்று ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை சுற்றிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. காருக்குள் திருமண அழைப்பிதழ்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள், தாந்தோன்றிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட போலீசார் விரைந்து வந்து அந்த காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கார், காணாமல் போனதாக கூறப்படுகிற செல்வராஜ், வசந்தாமணி ஆகியோர் பயணித்த கார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்து மருமகன் கவுசிக் தாந்தோன்றிமலை போலீசில், அந்த காரில் பயணம் செய்தது தனது மாமனார், மாமியார் தான் என்றும், வெள்ளகோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்த போது இருவரும் மாயமான விவரத்தை போலீசில் தெரிவித்தார்.இதையடுத்து கவுசிக் வெள்ளகோவில் அருகே உத்தண்டகுமாரவலசுவில் உள்ள செல்வராஜின் அக்காள் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரது வீட்டு அருகே மரக்கிளைகள் வெட்டப்பட்டு இருப்பதும், ஒருவிதமான துர்நாற்றம் வீசியதையும் உணர்ந்தார். செல்வராஜ் அக்காள் கண்ணம்மாளிடம், தனது மாமனார், மாமியார் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தார்களே என்று கேட்டதற்கு அவர்கள் வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு சென்றதாக கண்ணம்மாள் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் கவுசிக் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கண்ணம்மாள் வீட்டு அருகே ஒரு வித துர்நாற்றம் வீசியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். துர்நாற்றம் வீசிய இடம் அருகே சென்ற போது ஒரு குழி தோண்டப்பட்டு அவசர, அவசரமாக மண் போட்டு மூடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த குழியை தோண்டி பார்த்தனர்.அப்போது அந்த குழிக்குள் செல்வராஜ், அவருடைய மனைவி வசந்தாமணி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டு போர்வையால் மூடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 2 பேரையும் யாரோ மர்ம ஆசாமிகள் கொன்று குழி தோண்டி புதைத்து உள்ளனர். செல்வராஜின் அக்காள் வீட்டு அருகே இருவரும் புதைக்கப்பட்டு இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கண்ணம்மாள் கணவர் செல்லமுத்து 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.அவரது மகள் பூங்கொடிக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இதனால் கண்ணம்மாள் அங்கு தனியாக வசித்து மில் வேலைக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு நேரமாகி விட்டதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) குழி முழுவதுமாக தோண்டப்பட்டு 2 பேரின் பிணத்தையும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக செல்வராஜின் அக்காள் கண்ணம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.நிதி நிறுவன அதிபர், மனைவியுடன் படுகொலை செய்யப்பட்டு இருப்பதால் தொழில் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டார்களா? கொலை செய்யப்பட்டவர்கள் அக்காள் வீட்டு அருகே புதைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் பயணம் செய்த கார் கரூர் அருகே மீட்கப்பட்டு உள்ளது. போலீசாரை திசை திருப்ப கொலையாளிகள் நடத்திய நாடகமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருக்கோவிலூர் அருகே, விவசாயி படுகொலை
திருக்கோவிலூர் அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.
2. விழுப்புரத்தில் தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து படுகொலை உறவினர் உள்பட 7 பேர் கைது
விழுப்புரத்தில் தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. வீட்டில் இருந்த மிக்சியை விற்று மது வாங்கியதால் ஆத்திரம்: தையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி கைது
திருப்பூர் அருகே வீ்ட்டில் இருந்த மிக்சியை விற்று மது வாங்கிய தையல் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
4. நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா? - மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா என தனது மனைவியை குத்திக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை
முத்தியால்பேட்டையில் கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.