புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 13 Oct 2019 4:00 AM IST (Updated: 13 Oct 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் பழமைவாய்ந்ததும், பிரசித்திபெற்றதுமான கல்யாண வெங்கடரமணசாமி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக் கிழமையையொட்டி பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூக்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நடந்ததும், பக்தர்கள் சென்று பெருமாளை வழிபட்டு சென்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் ஒத்த செருப்பினை காணிக்கையாக பெருமாளுக்கு கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சென்றனர். இதேபோல் தேங்காய் உடைத்தும் பக்தர்கள் பலர் நேர்த்திக்கடன் செலுத்தியதை காண முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

நொய்யல்

இதேபோல நொய்யல் அருகே கோம்புபாளையத்தில் பூமிதேவி, நீலாதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சாமிகளுக்கு பால், பழம், தயிர், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூக்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story