ஆண்டிப்பட்டி அருகே, குடும்பத்தகராறில் பெண் குத்திக்கொலை - கணவர் கைது


ஆண்டிப்பட்டி அருகே, குடும்பத்தகராறில் பெண் குத்திக்கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2019 4:45 AM IST (Updated: 13 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே, குடும்பத்தகராறில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கண்டமனூர்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 48). கொத்தனார். அவருடைய மனைவி பேச்சியம்மாள் (35). இந்த தம்பதிக்கு விஷ்ணு (12) என்ற மகனும், பிரியாலட்சுமி (11) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.

மேலும் வெள்ளையப்பன் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வெள்ளையப்பன் மதுபானம் குடித்து விட்டு வந்தார். இதனை கண்டித்த பேச்சியம்மாளுக்கும், வெள்ளையப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பேச்சியம்மாளை, வெள்ளையப்பன் தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த பேச்சியம்மாள் தனது குழந்தைகளுடன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதனையறிந்த வெள்ளையப்பன், நேற்று காலை மொட்டனூத்து கிராமத்துக்கு வந்தார்.

பின்னர் மாமனார் வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்த பேச்சியம்மாளை தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளையப்பன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பேச்சியம்மாளை சரமாரியாக குத்தினார். இதில், நிலைகுலைந்த பேச்சியம்மாள் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்து வெள்ளையப்பன் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பேச்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையப்பனை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள ஓடை அருகே சுற்றித்திரிந்த வெள்ளையப்பனை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில், மனைவியை கணவரே குத்திக்கொன்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story