அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; மேலும் ஒரு வாலிபர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; மேலும் ஒரு வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 8:18 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி, 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 28). அவரது தம்பி வெங்கடேஷ். இவர், பி.எட் படித்து விட்டு ஆசிரியர் வேலைக்காக முயற்சி செய்து வந்தார். இந்தநிலையில் தனலட்சுமிக்கு, உறவினரான திண்டுக்கல் அருகே உள்ள உறுமிக்காரன்பட்டியை சேர்ந்த பழனிவேல் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது அவர், வெங்கடேசுக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக தனலட்சுமியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்காக ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்று பழனிவேல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆசிரியர் வேலை வாங்கி தருவதற்கு உதவுவதாக தனது நண்பர்களான வேடசந்தூரை சேர்ந்த நரசிங்கமூர்த்தி, சென்னை பல்லாவரத்தை சேர்ந்த முத்துக்குமார் (34) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். தனது தம்பிக்கு வேலை கிடைக்கும் ஆசையில் தனலட்சுமி, 3 பேரிடமும் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் வெங்கடேஷ் திடீரென விபத்தில் இறந்துவிட்டார். எனவே தனலட்சுமி தனது தம்பி இறந்துவிட்டதால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு தெரிவித்துள்ளார். ஆனால் 3 பேரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் கடந்த 2018-ம் ஆண்டு தனலட்சுமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் பழனிவேல், நரசிங்கமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் சேர்ந்து திண்டுக்கல், மதுரையை சேர்ந்த 13 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தது அம்பலமானது.

இதுதொடர்பாக பழனிவேல், நரசிங்கமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். முத்துக்குமார் போலீசார் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் மீண்டும் தனலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முத்துக்குமார் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், சென்னை பல்லாவரம் வெங்கடேஷ் நகரில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story