கணினிகளை முடக்கி பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள் - போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்கள் புகார்


கணினிகளை முடக்கி பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள் - போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்கள் புகார்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 8:19 PM GMT)

கணினிகளை முடக்கி பணம் கேட்டு மிரட்டுவதாக ஹேக்கர்கள் மீது போட்டோ ஸ்டூடியோக்களின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை,

கோவையில் சில போட்டோ ஸ்டூடியோக்களின் கணினிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று முடக்கப்பட்டன. இதனால் அவற்றில் பதிவு செய்து வைத்திருந்த போட்டோக்களை எடுக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டூடியோ உரிமையாளர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ஸ்டூடியோ உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

கோவையில் 7 ஸ்டூடியோக்களின் கணினிகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணினியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மொத்த செயல்பாடுகளும் திடீரென்று நின்று விட்டது. அப்போது கணினி திரையில் ஒரு இ-மெயில் வந்தது. அதில் உங்கள் கணினி ஹேக் செய்யப்பட்டு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்றால் 970 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த ஹேக்கர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பயன்படுத்தும் கணினிகளுக்கு இணைய தள சேவை உள்ளது. அதன் மூலம் தான் நாங்கள் எடுத்த போட்டோக்களை மற்றவர்களுக்கு அனுப்பு கிறோம். போட்டோக்களை பெறுகிறோம். இணையதள சேவை இல்லாமல் எங்களால் ஸ்டூடியோக்களை நடத்த முடியாது.

எங்கள் தொழிலுக்கு இணையதள சேவை அவசியம் என்பதை தெரிந்து கொண்டு அதன் மூலம் ஊடுருவி ஹேக்கர்கள் கணினிகளை முடக்கி உள்ளனர். தற்போது கணினி முடக்கப்பட்டு உள்ளதால் அதில் பதிவாகி இருந்த போட்டோக்களை எடுக்கவோ பார்க்கவோ முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு போட்டோக்களை கொடுக்க முடியவில்லை. இதனால் தொழில் முடங்கி உள்ளது. கணினி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள் ஆன்லைன் வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்வார்கள். அந்த வங்கி கணக்கு யாருடையது என்பதையும் கண்டுபிடிக்க தெரியாது. அதை நம்பி செயல்பட்டாலும் கணினிகளை பழைய நிலையில் பயன்படுத்த முடியுமா என்பது தெரிய வில்லை.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஸ்டூடியோக்களை குறி வைத்து கணினிகள் முடக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை தொடராமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story