பொருளாதார மந்த நிலை நிலவினால் ஒரே நாளில் 3 இந்தி படங்கள் ரூ.120 கோடி வசூல் குவித்தது எப்படி? மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கேள்வி


பொருளாதார மந்த நிலை நிலவினால் ஒரே நாளில் 3 இந்தி படங்கள் ரூ.120 கோடி வசூல் குவித்தது எப்படி? மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கேள்வி
x
தினத்தந்தி 12 Oct 2019 11:07 PM GMT (Updated: 12 Oct 2019 11:07 PM GMT)

பொருளாதார மந்த நிலை நிலவினால் ஒரேநாளில் 3 இந்தி படங்கள் ரூ.120 கோடி வசூல் குவித்தது எப்படி என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

மும்பை,

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்து உள்ளது. பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு துறை சார்ந்த தீர்வுகளை வழங்கி வருவதாக அண்மையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மும்பை வந்திருந்த சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவரிடம் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், தேசிய விடுமுறை தினமான கடந்த 2-ந் தேதி(காந்தி ஜெயந்தி) அன்று மூன்று இந்தி படங்கள் ரூ.120 கோடி வரை வருமானம் ஈட்டி உள்ளன.

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது என்றால் வெறும் மூன்று படங்களால் மட்டும் எப்படி ஒரே நாளில் இவ்வளவு பெரிய வசூலை குவிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருப்பதாக கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், அரசுக்கு எதிரான சிலர் மக்களிடம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார்.

பொருளாதார மந்த நிலையை இந்திப்பட வசூலுடன் ஒப்பிட்டு மத்திய மந்திரி ஒருவர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story