பெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது


பெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 3:09 PM GMT)

பெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது.

பெரம்பலூர்,

உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று பெரம்பலூரில், பேரிடர் தணிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவிகள் மழைக்காலத்தின் போது கொதிக்க வைத்த குடிநீரை அருந்துவோம், தீ விபத்து, இடி மின்னலின் போது மின் இணைப்பை துண்டிப்போம், நிலநடுக்கம் அறிகுறி தெரிந்தவுடன் வீட்டிற்கு வெளியே திறந்த பகுதிக்கு செல்வோம், பேரிடர் செய்திகளை கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 1800 425 4556 ஆகியவைக்கு தெரிவிப்போம், இடி மின்னலின் போது மரத்திற்கு அடியில் நிற்பதை தவிர்ப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரிடர் தணிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஒத்திகை நிகழ்ச்சி

இதையடுத்து மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பேரிடர் தணிப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் பேரிடர் காலங்களில் அவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்வது, நமது உடைமைகள், கால்நடைகள் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிப்பு துறை, போலீசார், இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையின் செயல்பாடுகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களின் பயன்பாடுகள் குறித்து அதன் வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிப்பு துறையினர் செய்திருந்தனர். இதில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, தாசில்தார் பாரதிவளவன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் அனிதா, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story