தஞ்சை அருகே பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது


தஞ்சை அருகே பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 14 Oct 2019 4:30 AM IST (Updated: 13 Oct 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர்,

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தஞ்சையை அடுத்த கூடலூர் கிராமத்தில் பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி நேற்று காலை நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

மழை வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

குடங்கள், டியூப்கள், வாழை மரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரில் மூழ்காமல் எப்படி வெளியேற வேண்டும் என்பது குறித்து வெண்ணாற்றில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். மேலும் ஆறுகளில் தத்தளிப்பவர்களை எப்படி மீட்டு கரைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் செய்து காண்பித்தனர்.

ஊர்வலம்

பின்னர் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஊர்வலம் கூடலூர் கிராமத்தில் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மழை வெள்ளம், புயல், தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பொருட்கள் மூலம் தங்களையும், மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் கூடலூர் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் பேரிடர் செயல்விளக்க பயிற்சி அளிக்க இந்த கிராமம் தேர்வு செய்யப்பட்டது. இந்த பயிற்சி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதன் மூலம் பேரிடர் காலங்களில் இழப்புகளை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ், தீயணைப்புத்துறை அலுவலர் திலகர், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) முருகேசன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story