திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது இதுவரை 22 கிலோ நகைகள் மீட்பு


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது இதுவரை 22 கிலோ நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 13 Oct 2019 11:15 PM GMT (Updated: 13 Oct 2019 5:37 PM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 28 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் பின்புறமுள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன்(வயது 45), அவரது அக்காள் மகன் சுரேஷ்(28), மணிகண்டன் உள்பட 8 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டனையும், சுரேஷின் தாய் கனகவள்ளியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4¾ கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. முருகனையும், சுரேஷையும் தேடி வந்த நிலையில், சுரேஷ் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை கோர்ட்டு உத்தரவு பெற்று திருச்சி சிறையில் போலீசார் அடைத்தனர். முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

12 கிலோ நகைகள் மீட்பு

இந்தநிலையில் பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் கடந்த 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 6 நாட்கள் முருகனை காவலில் எடுத்தனர். பின்னர் அவரை இரவோடு, இரவாக திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் அருகே முருகன் தங்கி இருந்த வாடகை வீட்டில் சோதனை நடத்தினார்கள். பின்னர் முருகன் கொடுத்த தகவலின்பேரில், அவரை அழைத்து கொண்டு திருவெறும்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் புதைத்து வைத்திருந்த ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகளை கைப்பற்றினர்.

பின்னர் நகைகளை எடுத்து கொண்டு முருகனுடன் பெங்களூரு நோக்கி புறப்பட்டனர். பெங்களூரு போலீசார் திருச்சி வந்து நகைகளை கைப்பற்றி செல்வது குறித்து அறிந்த திருச்சி தனிப்படை போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பெங்களூரு போலீசார் பெரம்பலூர் அருகே சென்றபோது, அந்த காரை பெரம்பலூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதையடுத்து திருச்சி போலீசாரும் அங்கு சென்றனர். திருச்சியில் மீட்கப்பட்ட நகைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த நகைகள் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் பெங்களூரு போலீசாரிடம் திருச்சி போலீசார் தெரிவித்தனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

அதன்பிறகு இரு மாநில போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மீட்கப்பட்ட நகைகளை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைப்பதாகவும், அந்த நகைகளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து திருச்சி போலீசார் பெற்று கொள்ளலாம் என்றும் பெங்களூரு போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் முருகனை அழைத்து கொண்டு நகைகளுடன் பெங்களூருவுக்கு சென்றனர்.

முன்னதாக பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்த முருகனிடம் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த ஜனவரி மாதம் திருச்சி நெ.1 டோல்கேட் அருகே நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் முருகனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வங்கி சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் கட்டர் மூலம் வங்கி லாக்கரை உடைத்து கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் 150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நகைகள் எங்கே?

திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கிலும் கடந்த 7 மாதங்களாக எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பார்களா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய கியாஸ் வெல்டிங் கட்டர் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து திருடப்பட்டு இருந்ததால் கொள்ளையர்கள் திருச்சி மாநகரை சேர்ந்தவர்களாக இருக்குமோ? என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் தற்போது, முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் தான் இதிலும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகள் எங்கே? போன்ற பல்வேறு விடை தெரியாத கேள்விகள் உள்ளன. இதனால் எங்கெங்கெல்லாம் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் பெங்களூரு விரைந்துள்ளனர்.

மேலும் ஒருவர் கைது

இந்தநிலையில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பறிமுதல் செய்யப்பட்டது போக, மீதமுள்ள நகைகளை மதுரையில் ஒரு கடையில் விற்பனை செய்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குருவித்துறை அம்பலக்காரத்தெருவை சேர்ந்த கணேசன்(35) என்பவரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 100 கிராம் தங்க நகைகளையும் கைப்பற்றினர். இந்த நகைகள் அனைத்தும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இதுவரை 22¾ கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

மீதம் 5¼ கிலோ நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2011-ம் ஆண்டு முதல் முருகன் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் புதுச்சேரியை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலமாக தான் விற்பனை செய்துள்ளனர். அவரை பிடித்தால் இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே திருச்சி சிறையில் உள்ள சுரேஷையும் காவலில் எடுக்க திருச்சி கோட்டை போலீசார் இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. சுரேஷிடம் விசாரணை நடத்தினால் இந்த கொள்ளையில் முருகனுடன் மேலும் எத்தனை பேர் இருந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

Next Story