ஆவடி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது; முன்விரோதம் காரணமாக நண்பர்கள் கொன்றார்களா? என விசாரணை


ஆவடி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது; முன்விரோதம் காரணமாக நண்பர்கள் கொன்றார்களா? என விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2019 11:15 PM GMT (Updated: 13 Oct 2019 5:41 PM GMT)

ஆவடி அருகே அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர்அடையாளம் காணப்பட்டார். முன்விரோதம் காரணமாக நண்பர்களே அழைத்து சென்று கொலை செய்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆவடி,

ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோ பகுதி வழியாக கடந்த 10-ந் தேதி இரவு அன்று 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். அங்குள்ள ஆர்ச் அந்தோணியர் நகர் பி.எஸ்.என்.எல். காலி மைதானம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை மற்ற 3 பேரும் அடித்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த வாலிபரின் கழுத்து, தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இறந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என விசாரித்து வந்தனர்.

இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இறந்துபோன வாலிபரின் உருவத்தை புகைப்படம் எடுத்து அதை வைத்து சென்னை புறநகர் மற்றும் பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இறந்து போன நபர் சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 31) என்பதும், அவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு சரோஜினி (22) என்ற மனைவியும், மீனாஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர். இவர் மீது மதுரை மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கும், சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளும் உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இறந்து போன பிரகாஷின் மனைவியிடம் போலீசார் விசாரித்தபோது, சம்பவத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு உடனே வருவதாக கூறிச் சென்ற பிரகாஷ் வீடு திரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது போலீசார் கூறிய பிறகுதான் தனது கணவர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்ததாக பிரகாஷின் மனைவி போலீசாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் பிரகாஷின் மனைவி சரோஜினியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கொலை செய்த மர்மநபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக நண்பர்களே அவரை அழைத்து சென்று கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story