கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு, வியாபாரி விஷம் குடித்ததால் பரபரப்பு
கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தாக்கியதால் மனமுடைந்த வியாபாரி ஒருவர் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி வசந்தம் நகரை சேர்ந்த இசக்கி மகன் ராயப்பன் (வயது 35). இவர் ரெயில் நிலையத்தில் கடலைமிட்டாய், முறுக்கு போன்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவரையும், சக வியாபாரிகளான சாத்தூரை சேர்ந்த ஜெயபாண்டி, முத்துராமலிங்கம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் ஆகியோரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று காலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தன்னை தாக்கியதாக கூறி ராயப்பன் கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்து பதறிப்போன சக வியாபாரிகள், உறவினர்கள் ராயப்பனை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் அரசு ஆஸ்பத்திரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்கள், ராயப்பனை தாக்கிய ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் நிலையங்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story