விருத்தாசலத்தில், மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்


விருத்தாசலத்தில், மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Oct 2019 3:30 AM IST (Updated: 14 Oct 2019 6:27 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2017-18 ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது குறித்து அடிக்கடி மாணவர்கள் பள்ளிக்கு வந்து மடிக்கணினி எப்போது வழங்கப்படும் என கேட்டு வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் ஆசிரியர்கள் கொடுக்கவில்லை என தெரிகிறது.

 இந்த நிலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்து, தங்களுக்கு எப்போது மடிக்கணி வழங்கப்படும் என அங்கிருந்த ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதிலை கூறவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பள்ளி முன்பு உள்ள கடலூர்– விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தங்களுக்கு உடனே மடிக்கணினி வழங்க வேண்டும் என கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story