‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சரண் அடைந்த, மாணவர் இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி - 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சரண் அடைந்த வாணியம்பாடி மாணவர் இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தேனி,
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி, தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த மாணவர் இர்பான் சேலம் கோர்ட்டில் கடந்த 1-ந்தேதி சரண் அடைந்தார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 9-ந்தேதி தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், காவல் நீட்டிக்கப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், மாணவர் இர்பானை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், மாணவர் இர்பானுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு இருந்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக இர்பானை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், இர்பானை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். விசாரணை முடிந்து அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து கோர்ட்டில் இருந்து இர்பான், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் மாணவர் இர்பானிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அவர் தனது அப்பாவுக்கு தான் எல்லாம் தெரியும் என்றும், தனக்கு இடைத்தரகர்களை பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
இர்பானுக்கு இன்று வரை விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்து இருந்த நிலையில், நேற்று மாலையே விசாரணையை போலீசார் நடத்தி முடித்தனர். இதையடுத்து மாலை 6.30 மணியளவில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் இரவில் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து இர்பானை போலீசார் தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த ஜாமீன் மனுக்கள் மீது கடந்த 11-ந்தேதி நடந்த விசாரணையின் போது, ஆள்மாறாட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் 3 கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்த அறிக்கை கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மற்ற கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் முழுமையான விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும், பொது குறிப்பேடு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.
இந்த வழக்கில் டாக்டர் வெங்கடேசன், முகமது ஷபி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் கேட்டு, தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story