தேனி அருகே, தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
தேனி அருகே தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
தேனி,
தேனி அருகே கோடாங்கிபட்டியில் ஈஸ்டன் மசாலா என்ற தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இது, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்த நவாஷ் மீரான் என்பவருக்கு சொந்தமானது. இந்த தொழிற்சாலை அருகில், இந்த நிறுவனத்தின் 5 குடோன்கள் அடுத்தடுத்து உள்ளன. இதில் முழுவதும் குளிர்பதன வசதியுடன் கூடிய ஒரு குடோனும் அடங்கும்.
இங்கு மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மஞ்சள், பட்டை, கிராம்பு உள்ளிட்ட மசாலா தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். இந்த குளிர்பதன குடோனில் 4 உள்ளடுக்கு அறைகள் உள்ளன. நேற்று காலை 8 மணியளவில் தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் என சுமார் 200 பேர் இங்கு பணியாற்றி கொண்டு இருந்தனர்.
அப்போது காலை 8.30 மணியளவில் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், குடோனில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் தலைமையில், தேனி, போடி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள் தீ குடோனின் பெரும் பகுதிக்கு பரவி விட்டது. இதையடுத்து மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் உள்ள 8 வாகனங்கள், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து தலா 2 வாகனங்கள் என மொத்தம் 12 தீயணைப்பு வாகனங்களின் மூலம், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களால் குடோனுக்குள் நுழைந்து தீயை அணைக்க முடியவில்லை. இதனால், அருகில் உள்ள குடோனில் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பக்கத்து குடோன்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா மற்றும் தாசில்தார்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர் கள் உள்பட பலரும் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். கட்டுக்கடங்காமல் தீப்பற்றி எரிந்ததால், மாலை வரை தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது.
இதுகுறித்து தீயணைப்புதுறையினர் கூறுகையில், ‘குடோன் முழுவதும் தீப்பிடித்துள்ளது. முழுமையாக தீயை அணைத்து முடிக்க பல மணி நேரம் ஆகும். பக்கத்து மாவட்டங்களில் இருந்து மேலும் 50 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின் கசிவால் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட் கள் எரிந்து நாசமாகி உள்ளன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த குடோன் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது, முழுவதும் ஏ.சி. எந்திரங்கள் பொருத்தி குளிர்பதன வசதி செய்யப்பட்டு இருந்தது. அவை முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டன. இந்த குடோனுக்குள் 1,300 டன் மிளகாய் வத்தல், பல நூறு டன் பட்டை, கிராம்பு உள்ளிட்ட பொருட்கள் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தத்தில் சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. பொருட்கள் இருப்பு விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு தான் உண்மையான சேத மதிப்பு தெரியவரும்’ என்றார்.
Related Tags :
Next Story