திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் யாராவது விஷம், மண்எண்ணெய் போன்றவற்றை கொண்டு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்திலும் 2 பெண்கள் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவர் கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பும், மற்றொருவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பும் மண்எண்ணெய் ஊற்றி கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை மீட்டனர். அவர்களிடம் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒருவர் தண்டராம்பட்டு தாலுகா புத்தூர் செக்கடியை சேர்ந்த அஞ்சலை (வயது 50) என்பதும், தனக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் கூறினார்.
அதேபோல் மற்றொருவர் திருவண்ணாமலை தாலுகா பழைய மல்லவாடியை சேர்ந்த கோவிந்தம்மாள் (45) என்பதும், தனது கணவர் இறந்து விட்டதால் விதவை உதவித்தொகை, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவர்களை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
2 பெண்கள் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தினால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story