தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து மு.க.ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் - விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து மு.க.ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் - விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2019 11:15 PM GMT (Updated: 14 Oct 2019 7:15 PM GMT)

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து மு.க.ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று காலை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதுரப்பாக்கம், ஆவுடையார்பட்டு, வி.சாத்தனூர், பொன்னங்குப்பம் ஆகிய இடங்களிலும், மாலையில் ஆசூர், முட்டத்தூர், ஈச்சங்குப்பம், திருநந்திபுரம் ஆகிய இடங்களிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உங்களது எழுச்சியை பார்க்கும் போது இந்த இடைத்தேர்தலில் நமது வேட்பாளர் புகழேந்தியை வெற்றி பெற வைக்க முடிவு செய்து விட்டீர்கள் என்பதை நான் அறிகிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியா முழுவதும் மோடியை வரவேற்றனர். தமிழகத்தில் மட்டும் மோடியை மட்டுமல்ல அவரது அடிமைகளையும் விரட்டினார்கள்.

தமிழக மக்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக சுயமரியாதையுடன் இருப்பதை இந்தியா முழுவதும் திரும்பி பார்த்தது. அப்படிப்பட்ட இமாலய வெற்றியை தந்தீர்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் நலனுக்காக உங்களின் குரலாக ஒலித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த 2 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. வருகிற 2021-ல் நடைபெறுகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற வைத்து மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்குவதற்கு ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது. ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக வெளியாகும் டிரைலர் போன்றது இந்த இடைத்தேர்தல்.

இதில் நாம் வெற்றி பெற்றால், எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்து உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.சென்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று நினைத்தா வாக்களித்தீர்கள்? ஜெயலலிதா முதல்-அமைச்சராக வேண்டும் என்று நினைத்து வாக்களித்தீர்கள். ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலாவால் முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி.

அவர் நமது தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து விபத்தினால் வந்தவர் என்று சொல்கிறார். ஸ்டாலின் படிப்படியாக இந்த இயக்கத்திற்காக உழைத்து வளர்ந்து இன்றைக்கு தலைவராக உள்ளார். எடப்பாடி பழனிசாமி கூறி வரும் கருத்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் மாணவ- மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மு.க. ஸ்டாலின் விலக்கு பெற்றுத்தருவார்.

இந்த தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் தலைவர் கருணாநிதி ஆட்சியில் உலக வங்கியிடம் இருந்து ரூ.300 கோடி நிதியை பெற்று கொண்டு வரப்பட்டது. இதனை கருணாநிதி கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக இத்திட்டத்தை அ.தி.மு.க.வினர் முடக்கி வைத்துள்ளனர். தி.மு.க. ஆட்சி வந்ததும் இத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். நாங்கள் சொல்வதையே செய்வோம், செய்வதையே சொல்வோம். இந்த தேர்தலில் உதயசூரியன் உதிக்கப்போவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story