மழைக்காலத்தில் நீர்நிலைகளில் குழந்தைகளை குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது - கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்


மழைக்காலத்தில் நீர்நிலைகளில் குழந்தைகளை குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது - கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:00 AM IST (Updated: 15 Oct 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில் நீர் நிலைகளில் குழந்தைகளை குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது என்று கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி தீயணைப்பு துறையினரின் பேரிடர் தடுப்பு செயல்விளக்க நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் செயல்விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதாராணி, தாசில்தார் சுகுமார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பேரிடர் காலங்களில் வீடுகளில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு, விபத்துக்கள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முறைகள், தீத்தடுப்புக்கான ஆலோசனைகள், பல்வேறு வகையான இடர்களில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர். மேலும், மழை, வெள்ளம் ஏற்படும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், வி‌‌ஷவாயு தாக்குதல் உள்ளிட்ட இடர்கள் ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசுகையில், பேரிடர் காலங்களில் விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் பல்வேறு செயல்முறை விளக்கங்களை அளித்து உள்ளனர். இவற்றை முறையாக பின்பற்றி தீ விபத்துகள், பேரிடர்களில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தில் தொடங்கி வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழைக்காலத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குழந்தைகள், மாணவ-மாணவிகளை குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது. இதன் மூலம் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

இந்த தீத்தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா, தீத்தடுப்பு படை வீரர்கள் கன்னியப்பன், தேவராஜன், சந்தோ‌‌ஷ், வினோத், விமலானந்தன், ரமே‌‌ஷ் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

Next Story