பாளையங்கோட்டையில் பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை - கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்


பாளையங்கோட்டையில் பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை - கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:00 AM IST (Updated: 15 Oct 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நடந்த பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை கலெக்டர் ‌ஷில்பா தொடங்கிவைத்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, கருத்தரங்கம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை துறையினரின் பேரிடர் காலங்களில் செய்யக் கூடிய செயல்முறை விளக்கங்களையும் கலெக்டர் ‌ஷில்பா தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் மழைக்காலங்களில் காய்ச்சிய குடிநீரை குடிக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கையில் குடையை எடுத்துச் செல்ல வேண்டும். இடி-மின்னலின் போது மரத்தின்கீழே கூரை போன்ற தற்காலிக இடங்களில் நிற்கக்கூடாது. ஈர கைகளால் மின்சார சுவிட்ச் போடக் கூடாது. சுனாமி, சுறாவளி, நிலநடுக்கம் உள்ளிட்ட நேரங்களில் டி.வி. பார்ப்பதை தவிர்க்கவேண்டும். இந்த பாதுகாப்பு குறித்த செய்திகளை மாணவ-மாணவிகள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் தெரிவித்து அனைவரையும் பாதுகாக்க உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறையின் சார்பில் தீ தடுப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சியும், பேரிடர் காலங்களில் உயரமான கட்டடத்தில் இருந்து வெளியேறுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஸ் நாரணவரே, பயிற்சி உதவி கலெக்டர்கள் சிவகுருபிரபாகரன், அனிதா, தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன் (பாளையங்கோட்டை) தங்கராஜ் (பேரிடர்மேலாண்மை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story