கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; மீனவர் பலி உறவினர்கள் திடீர் மறியல்


கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; மீனவர் பலி உறவினர்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 16 Oct 2019 3:30 AM IST (Updated: 16 Oct 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் மீனவர் பலியானார். இதையடுத்து உறவினர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கானத்தூர் கிராமம் அங்காளம்மன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). மீனவரான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது கிராமத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.

காத்தான்கடை சந்திப்பு பகுதியில் வரும்போது அவருக்கு முன்னால் சென்ற லாரி திடீர் என்று நிறுத்தப்பட்டது. அப்போது சுதாகரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக அந்த லாரியில் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமு, தேன்மொழி, சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சமாதானம் அடைந்த அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story