போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட கொள்ளையன் சுரேசிடம் 2-வது நாளாக விசாரணை


போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட கொள்ளையன் சுரேசிடம் 2-வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2019 10:15 PM GMT (Updated: 15 Oct 2019 8:08 PM GMT)

திருச்சியில் பிரபல நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்த சுரேசை போலீசார் காவலில் எடுத்து 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம், வைர நகைகளை திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்தது. இந்த வழக்கில் கொள்ளையன் முருகனின் கூட்டாளியான மணிகண்டன் திருவாரூரில் வாகன சோதனையின்போது சிக்கினார். அப்போது சுமார் 5 கிலோ நகைகள் சிக்கின.

மேலும் அவருடன் வந்த முருகனின் அக்காள் மகனான திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் தப்பி ஓட்டம் பிடித்தார். பின்னர் அவர் கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் 11-ந் தேதி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் முருகன் சரண் அடைந்தார்.

பங்கு நகை எங்கே?

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சுரேசை நேற்று முன்தினம் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து திருச்சி கோட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த பின்னர் முருகன் தனது கூட்டாளிகளுக்கு நகைகளை பங்கு பிரித்து கொடுத்து விட்டார்.

அவற்றில் சுரேசுக்கு கொடுக்கப்பட்ட நகை எவ்வளவு? அவற்றை அவர் எங்கே மறைத்து வைத்துள்ளார்? என போலீசார் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். விசாரணை விவரங்களை போலீசார் வெளியில் கசிய விடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள். வருகிற 21-ந் தேதிவரை விசாரணை நடத்தி விட்டு கோர்ட்டில் மீண்டும் சுரேசை ஆஜர்படுத்திய பின்னரே முழுவிவரமும் தெரிய வரும். இதற்கிடையே, ஏற்கனவே மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5 கிலோ நகைகளை நேற்று போலீசார் திருச்சி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


Next Story