சுவிஸ் வங்கியில் நான் பணம் வைத்து இருப்பதை நிரூபித்தால் "எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" - மு.க.ஸ்டாலின் பேச்சு
“சுவிஸ் வங்கியில் நான் பணம் வைத்து இருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார்"என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
நெல்லை,
நாங்குநேரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தளபதிசமுத்திரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து அவர், பொன்னாக்குடி, கே.டி.சி. நகர் வடக்கு பகுதி, பர்கிட் மாநகரம், சீவலப்பேரி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று, கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை சுட்டிக் காட்டுவது ஜனநாயக கடமை. அதன் அடிப்படையில் நான் பிரசாரம் செய்து வருகிறேன். நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நில அபகரிப்பு வழக்கில் சிக்கி உள்ளார். நாங்கள் நிறுத்தி உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி சேவை செய்துள்ளார். எனவே, அவரை நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால், உங்கள் தொகுதி பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்தார். அவரது பேச்சில் அ.தி.மு.க.வின் 8 ஆண்டு கால ஆட்சி பற்றி கூறுவார் என்று நினைத்தேன். ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
அவரை எடப்பாடி பழனிசாமி என்றுகூட சொல்லக்கூடாது, எடுபிடி பழனிசாமி என்றுதான் கூற வேண்டும். இப்படி சொன்னால், அவருக்கு கோபம் வருகிறது. அவர், மத்திய பா.ஜனதா அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறார்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான். அவர் மறைந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சரானார். பின்னர் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார். அவர் சசிகலாவின் காலில் விழுந்து முதல்-அமைச்சராகாமல், தரையில் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சரானார். தரையில் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சரான ஒரே நபர் அவர் மட்டும்தான். ஆனால், அவர் தன்னை மக்களின் முதல்-அமைச்சர் என்கிறார்.
நான் திண்ணை பிரசாரம் செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெறுகிறேன். இதைப்பற்றி விமர்சனம் செய்கின்றனர். நான் பெறும் மனுக்கள் தி.மு.க. ஆட்சி வந்தவுடனே பரிசீலிக்கப்பட்டு உடனே தீர்க்கப்படும். அதுவரை இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்படும். இதுபற்றி அமைச்சர்களிடம் முறையிடுவோம். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து நிறைவேற்றி தருவோம். மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடி வரும் கட்சி தி.மு.க.தான்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 122 பேர் இருக்கின்றனர். அவர்கள் என்றாவது தொகுதி மக்களிடம் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றது உண்டா? பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டது உண்டா? இந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த துப்பில்லை. அவர்கள் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும்?.
நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். சட்டசபையில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது யார்?. அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் யாரால் வந்தது?. அப்போது அங்கு இடைத்தேர்தல் திணிக்கப்படவில்லையா?.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு காங்கேயம், பர்கூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, வென்றார். பின்னர் காங்கேயம் சட்டசபை தொகுதியை ராஜினாமா செய்தார். அப்போது ஒரு இடைத்தேர்தல் வந்தது. அவர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?. தவறான பிரசாரம் மூலம் மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்க, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். தனிப்பட்ட முறையில் அங்கு சென்றால், அதைப்பற்றி கேள்வி கேட்க மாட்டேன். முதல்-அமைச்சர் என்ற முறையில் அங்கு சென்றதால், அதைப்பற்றி கேள்வி கேட்கிறேன். ஆனால் அவர் அதற்கு பதில் கூறாமல், என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார். உங்களது ஆட்சியில் வெளிநாடு செல்லவில்லையா? என்று கேள்வி கேட்கின்றனர். நான் இல்லை என்று சொல்லவில்லை.
நான் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது ஜப்பான் நாட்டுக்கு சென்று, உலக வங்கி நிதி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினேன். சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வந்தேன். நான் முதல்-அமைச்சரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த ஆட்சியில் கொள்ளைடியத்த பணத்தை பதுக்குவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றாரா? என்று கேட்க விரும்புகிறேன். அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
நான் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறுகின்றனர். அவர்கள் தற்போது தி.மு.க. ஆட்சி நடப்பதாக நினைக்கின்றனர். கடந்த 8 ஆண்டு காலமாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. மத்தியிலும் உங்களுக்கு இணக்கமான ஆட்சிதான் உள்ளது. நான் எவ்வளவு பணம் பதுக்கி வைத்துள்ளேன் என்பதை ஏன் கண்டுபிடித்து வெளியே சொல்லவில்லை?. நீங்கள் அதனை நிரூபித்தால் நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார். நீங்கள் நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் ஊரை விட்டே ஓட வேண்டும். மேலும் நெடுஞ்சாலை துறை டெண்டர் விடுவதில் முதல்-அமைச்சர் மீது உள்ள ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதியே உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஊழல்கள் உள்ளது.
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
பிரசாரத்தின்போது நாங்குநேரி தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், எம்.பி.க்கள் ஞானதிரவியம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், மூர்த்தி, செந்தில்குமார், நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, மண்டல தலைவர் தனசிங் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடியும், செண்டை மேளம் முழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story