வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை


வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 16 Oct 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்றும் (வியாழக்கிழமை) மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் பரவலாக மழை கிடைத்து இருந்தது. தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவில் இருந்தே மழை பெய்ய தொடங்கிவிட்டது. கடந்த மாதம் இறுதி வரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. அதன்பிறகு வறட்சியான நிலையே காணப்பட்டு வந்தது. வெயிலும் வாட்டி வதைத்தது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை மற்றும் புறநகரில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே கருமேகங்கள் சூழ்ந்தபடி பல இடங்களில் சாரல் மழை இடைவெளி விட்டு பெய்தது.

அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், பாரிமுனை, ராயபுரம் மற்றும் காசிமேடு உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பெரும்பாலான புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது. அதேநேரம் சில இடங்களில் சாரல் மழை பெய்தவாறு, வெயிலும் அடித்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மழை தொடரும் என்றும், இடைவெளிவிட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த சாரல் மழையால் கடந்த சில நாட்களாக கடும் உஷ்ணத்துடன் இருந்த சென்னை சற்று குளிர்ந்து இருக்கிறது.

Next Story