தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்


தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:15 PM GMT (Updated: 16 Oct 2019 7:57 PM GMT)

தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தப்பட்டது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் குட்டி சரள்விைளயைச் சேர்ந்தவர் ஜெர்லின் (வயது 24). இவர், பொக்லைன் எந்திர டிரைவராக இருந்தார். திடீரென்று இவரிடம் பணப்புழக்கம் அதிகமானது. சொகுசு கார்கள், பொக்லைன் எந்திரங்கள் வாங்கி தொழில் செய்ய தொடங்கினார். இவருக்கு தங்க புதையல் கிடைத்ததாக அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.

இதனை அறிந்த ஒரு கும்பல் ஜெர்லினை கடத்தி சென்று தங்க புதையல் கிடைத்தது குறித்தும், அந்த புதையல் என்ன என்பது குறித்தும், புதையலை கேட்டும் மிரட்டியது. அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஜெர்லின் இதுதொடர்பாக குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உதயமார்த்தாண்டம் பூம்பாறைவிளையைச் சேர்ந்த ஜெகன் என்ற ஜெயராஜன், கப்பியறை வேளாங்கோட்டுவிளையைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற ஜெய ஸ்டாலின், மேக்காமண்டபம் கடமலைக்குன்றைச் சேர்ந்த சுரேஷ்குமார், புத்தளத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளான ராஜா அருள்சிங், ராஜா அஸ்வின், வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையைச் சேர்ந்த ஜெரின் ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுரேஷ்குமார், கிருஷ்ணகுமார், ஜெரின்ராபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த விவகாரத்தில் கருங்கல் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் பொன்தேவி (வயது 45), அவருடன் பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான மேல் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். அவருடைய தாய் பிறந்த ஊர் குமரி மாவட்டம் மேக்காமண்டபம். பொன்தேவியும், புதையல் விவகாரத்தில் கைதான சுரேஷ்குமாரும் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது. பொன்தேவிக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ஆனாலும் சிறு வயது முதலே பாட்டி வீட்டுக்கு வரும் போதேல்லாம் சுரேஷ்குமாருடன் பொன்தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் அவர்களுக்கு இடையே தற்போது அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் இருவருக்கும் சொந்்தமான எஸ்டேட் ஒன்று வடக்கன்குளம் பகுதியில் உள்ளது.

இந்தநிலையில் தங்க புதையல் தொடர்பாக சுேரஷ்குமார், பொன்தேவியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, ஜெர்லினை கடத்தி சென்று வடக்கன்குளத்தில் உள்ள எஸ்டேட்டில் வைத்து மிரட்டி புதையல் தொடர்பாக விவரங்களை கேட்க வேண்டும், இல்லை என்றால் மிரட்டி பணம் பறிப்பது என்று அவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது.

அந்த திட்டத்தின்படி ஜெர்லினின் நண்பர் ஜெய ஸ்டாலின் மற்றும் சிலரை சந்தித்து பேசி உள்ளனர். அதன்படி மான்கறி சாப்பிட போகலாம் என்று ஜெர்லினை, ஜெய ஸ்டாலின் அழைத்து வந்தார். அவர்கள் ஒரு காரில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள எஸ்டேட்டுக்கு சென்றனர். அதே காரில் ெஜய ஸ்டாலின் தன்னுடயை கூட்டாளிகளான சுரேஷ்குமார் உள்ளிட்டவர்களை அழைத்து சென்றார்.

அங்குள்ள வீட்டுக்கு சென்றதும் ஜெர்லினை அங்குள்ள அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் புதையல் தொடர்பாக கேட்டு மிரட்டல் விடுத்தனர். அந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கேமரா காட்சிகள் பொன்தேவியின் செல்போனுடன் இணைக்கப்பட்டு இருந்தது.

ஜெர்லினிடம் புதையல் தொடர்பாக அவர்கள் விசாரித்த போது அந்த காட்சிகளை பார்த்தபடியே, எப்படி விசாரிக்க வேண்டும். என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து பொன்தேவி ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. மேலும் உண்மை விவரங்களை ஜெர்லின் கூற மறுத்ததும், தன்னுடன் வேலை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோரை அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. போலீசாரை கண்டதும் உண்மையை சொல்லி விடுவார் என்று அவர்கள் நினைத்தனர். அப்படி இருந்தும் ஜெர்லினிடம் இருந்து எந்தவொரு உண்மையும் வெளிவரவில்லை.

உடனே அவர்கள் ஜெர்லினிடம், ரூ.50 லட்சம் தந்தால் உயிரோடு விடுவோம் என்று கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, வெற்று தாள், பத்திரங்கள், பாண்டு பத்திரங்கள் என 50-க்கும் மேற்பட்ட ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் ஜெர்லினிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் தங்க காப்பு ஆகியவற்றையும் பறித்துள்ளனர். இந்த விவரம் வெளியே தெரிந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். ஆனாலும் ஜெர்லின் உயிருக்கு பயப்படாமல் போலீசாரை நாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நேரடி மேற்பார்வையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்களை கைது செய்ய குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. குமரி மாவட்டத்தில் தங்க புதையல் என்று கூறி டிரைவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொன்தேவி தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்டில் முதலில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அதன்பிறகு மாவட்ட குற்றப்பிரிவு, சென்னை ரெயில்வே போலீசில் பணிபுரிந்தார். கடந்த ஆண்டு (2018) பதவி உயர்வு பெற்று கருங்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.


Next Story