தவிடு மூடைகளால் மறைத்து லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


தவிடு மூடைகளால் மறைத்து லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 9:01 PM GMT)

அருமனை அருேக லாரியில் தவிடு மூடைகளால் மறைத்து கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் அருமனை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பனச்சமூடு சிறியகொல்லா சோதனைச்சாவடியில் நாகர்கோவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், அருமனை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், கோபகுமார், ஸ்ரீகுமார், ஏட்டு நாகராஜன் ஆகியோர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சேலம் மாவட்ட பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்தது. லாரியின் பின்பகுதியில் ஏராளமான மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார், லாரியில் என்ன பாரம் இருக்கிறது என்று டிரைவரிடம் கேட்டனர். அதற்கு டிரைவர் தவிடு மூடைகள் இருப்பதாக கூறினார்.

ரூ.14½ லட்சம்

இருந்தாலும் சந்தேகம் அடைந்த போலீசார் தார்ப்பாயை அவிழ்த்து, அதற்குள் இருந்த மூடைகளை சோதனை செய்தனர். அந்த சமயத்தில், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். போலீசார் நடத்திய சோதனையில் மேல்பகுதியில் இருந்த மூடைகளில் தவிடும், அதற்கு அடியில் இருந்த மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததும் தெரிய வந்தது. மொத்தம் 340 மூடைகளில் 16 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் லாரியுடன், 16 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியை அங்கிருந்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு கொண்டு சென்று அதிலிருந்த ரேஷன் அரிசி மூடைகளை ஒப்படைத்தனர். தொடர்ந்து லாரி புதுக்கடை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் லாரியின் மதிப்பு ரூ.14½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

கடத்தியது யார்?

இந்த ரேஷன் அரிசி நெல்லை மாவட்ட பகுதியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக நாகர்ே்காவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தியது யார்?, லாரியின் உரிமையாளர் யார்?, தப்பி ஓடிய டிரைவர் பெயர், முகவரி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story