நெல்லை பேட்டையில் கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை பேட்டையில் கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் முக்கூடல் சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மனைவி சிவகுமாரி என்ற ஆனந்தி (வயது 40). சந்திரசேகர் இறந்து விட்டதால், ஆனந்தி தன்னுடைய 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அருகில் உள்ள சிங்கம்பாறை சவரிமுத்து வடக்கு தெருவை சேர்ந்த செல்லப்பா (60) என்ற தொழிலாளி ஆனந்தி வீட்டுக்கு வந்து பழகினார். நாளடைவில் 2 பேருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் செல்லப்பாவின் கள்ளத்தொடர்பை கைவிட ஆனந்தி முடிவு செய்தார். இதற்காக அவர் நெல்லை பேட்டை என்.என்.சி. தெருவில் உள்ள ஒரு காப்பகத்துக்கு சென்றார். அங்கு 2 குழந்தைகளையும் சேர்த்து விட்டு, அவரும் அங்கேயே சமையல் வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி செல்லப்பா அந்த காப்பகத்துக்கு சென்றார். அங்கு இருந்த ஆனந்தியை சந்தித்து தன்னுடன் தனியாக குடித்தனம் நடத்த வருமாறு அழைத்தார். இதற்கு அவர் மறுத்து விட்டார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்லப்பா அரிவாளால் ஆனந்தியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி நஷீர் அகமது வழக்கை விசாரித்து கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற செல்லப்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து செல்லப்பாவை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜரானார்.
Related Tags :
Next Story